Friday, 26 October 2007

வளருமா தமிழ்வழிக்கல்வி ?

வளருமா தமிழ் வழிக்கல்வி ?


ஆங்கிலேயர்கள் நமக்கு ஆங்கிலத்தையும் நல்ல கல்வியையும் விட்டுப் போயிருக்கிறார்கள் என்று பெருமை கொண்டீர்களானால் மேலே படியுங்கள். உண்மையில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் நமது அற்புதமான கல்வி முறையை வேரோடு அழித்திருப்பது புலப்படும். மிக முக்கியமாக திரு தரம்பால் என்ற தத்துவ மேதையின் படைப்புக்கள் நம்முடைய ஆங்கிலேயர்களுக்கு முந்தைய கல்வி முறையையும் அவர்களின் ஆட்சியின் போது மாற்றம் அடைந்த கல்வி முறையையும் அறியலாம். திரு தரம்பால் அவர்களின் எழுத்துக்கள் 1800 களில் உள்ள அரசாங்க கோப்புகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.


ஆங்கிலேயர்களின் காலத்திற்கு முன்னால் நம் நாட்டில் முக்கிய மூன்று அமைப்புகளின் வாயிலாக கல்வி கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இவையாவன: பாடசாலைகள், குருகுல கல்வி மற்றும் முஸ்லீம் மதராசாக்கள். இந்திய கல்வி வரலாற்றில் இந்த மூன்று அமைப்புகளும் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. தற்போது இருக்கும் பள்ளிகளில் கற்றுத் தரும் வெறும் பாடங்களைப் போல் அல்லாது இந்த கல்வி முறைகளில், நல்ல பண்புகள், பற்பல வித்தைகள் என்று நல்ல தரமான மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்துமே கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்த பாடசாலைகளில் வேதம், சாஸ்திரம், புராணம், கணிதம், ஜோதிட சாஸ்திரம், அறிவியல் மற்றும் இலக்கியங்கள் பாடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அப்போது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையாவது இருந்தது என்று தாமஸ் முன்ரோ என்ற கவர்னர் குறிப்பிட்டிருக்கிறார். பத்து லட்சம் பாடசாலைகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் போன்ற ஒரு கல்வி அமைப்பு வேறு எந்த நாட்டிலும் அப்போது இருந்திருக்கவில்லை. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கப்பட்டிருக்கிறது என்பது இந்த ஆக்கங்களிலிருந்து அறியப்படுகிறது.


இதே சமயங்களில் இங்கிலாந்தில் மிகக் குறைந்த அளவு பள்ளிகளே இருந்தன. ஏ.இ.டாப்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழைகளின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டதாம். இங்கிலாந்தில் அப்போது யாவர்க்கும் கல்வி என்ற முறையே இல்லாமலிருந்தது. யாவர்க்கும் கல்வி என்ற முறை இந்த பாடசாலைகளில் தான் முதலில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த அமைப்பைத்தான் இங்கிலாந்திலும் யாவர்க்கும் கல்வி என்ற அமைப்பைக் கொண்டு வந்ததாக அறிஞர்களின் கூற்று.


காந்தியடிகளின் 1931ல் நிகழ்ந்த கூற்றுப்படி நாம் 1800களில் இருந்ததை விட இப்போது கல்வியறிவு மிக குறைவாகவே உள்ளோம். ஆங்கில ஆட்சியாளர்கள் நம் கல்வி முறையை வளப்படுத்தாமல் அதை வேறோடு அழித்திருப்பதாகவே காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் கல்வி முறையை ஆங்கிலேய அரசு தான் நம் மண்ணில் விதைத்தது. ஐரோப்பிய இலக்கியங்களும் இங்கு தான் முதன்முதலில் கற்பிக்கப்பட்டதாக வரலாறு. நீதி மன்றங்களிலும் ஆங்கிலத்தில் வாதாட திட்டம் வகுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் கல்வி பயின்றவர்களுக்கு உயர்பதவிகளைக் கொடுத்தது ஆங்கிலேய அரசு. இதனால் ஆங்கிலத்தில் கற்கும் முறை மிகவும் பிரபலமானது. இவ்வாறு ஆங்கிலம் நம் நாடெங்கும் ஊடுறுவியது.
கடந்த முப்பது ஆண்டுகளில் தான் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் எண்ணிக்கை எப்போதுமில்லாத அளவுக்கு பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆங்கிலத்தின் மூலம் கற்பதினால் நமக்கு மேலை நாட்டு தொழில்நுட்பங்களும் தொடர்புகளும் கிடைக்கும் என்ற காரணம் தான் இந்த ஆங்கில பாடதிட்டத்தில் கற்பதற்கு ஊக்கமாக செயல்படுகிறது. உயர்கல்விகளில் பெரும்பாலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நர்சரி, நடுநிலை, மேல்நிலைக் கல்விகளில் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பலமடங்காக உயர்ந்திருக்கிறது.

கல்வி கற்பதின் முதல் நோக்கமே பாடங்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். ஆனால் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்கள் பெரும்பாலும் சரியாக பாடங்களைப் புரிந்து கொள்வதில்லை, இல்லையெனில் முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக பாபா ப்ளாக் ஷிப் என்ற பாடலுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும் ? மேலும், அப்பாடல் யார் யாரிடம் உரையாடுவதாக தெரியும் ? தாய் மொழியில் கல்வி கற்கும் போது எளிதாக புரிந்து கொள்ளும் சக்தி பயன்படுகிறது. அதனால் கற்றதைப் பயன்படுத்துவதிலும் எளிமையும் புதுப்புது எண்ணங்களும் உருவாகும். புரியாத மொழியைக் கற்றுக் கொண்டு அதிலும் பாடங்களையும் கற்றுக் கொண்டு நம் திறமையை வெளிநாடுகளில் விற்கும் போது, கண்டிப்பாக அவரவர் தாய் மொழியில் பாடங்களைக் கற்று அதே சமயத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் அறிந்தால் நம் திறமையும் ஆற்றலும் மொத்தமும் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.


ஆனால், தொழிற்கல்வி போன்ற உயர்கல்வியை இன்று தமிழில் கற்க முடியுமா ? கிட்டத்திட்ட சாத்தியமேயில்லை எனலாம். ஏனெனில், பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். அந்த பாடதிட்டங்களை தமிழில் மாற்றுவதற்கு செலவாகும் நேரமும் பணமும் சற்றே திகைக்க வைத்தாலும் இது கண்டிப்பாக சாத்தியமே. எவ்வாறு ஆங்கிலமே இல்லாத நாட்டில் ஆங்கிலம் வேரூன்றியதோ, காலப்போக்கில் இதுவும் செய்து முடிக்கக் கூடிய ஒன்றே. மருத்தவப் படிப்பை தமிழில் பெறுவதற்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மேற்கொண்டிருக்கும் முயற்சி முற்றிலும் வரவேற்கக்கூடியதே. ஆனால், இது நடைமுறையில் வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகளாவது பொறுத்திருக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் தமிழ்வழிக்கல்வியும் இருந்தால் நம் திறமையின் அளவு விண்ணைத் தொடும் என்பதில் ஐயமில்லை.


இதே போன்ற பிரச்சனைகளைத்தான் ஆங்கிலம் அல்லாத நாடுகள் யாவும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பிரான்சில் பிரஞ்சு மொழி வழியேதான் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. புதியதாக எது வந்தாலும் முதலில் தங்கள் மொழிக்கு மொழி மாற்றம் செய்து விடுவார்கள். ஆனால் ஆங்கிலம் கற்க விருப்பமிருப்பவர்களுக்கு, ஆங்கிலம் வெறும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் சிந்திக்கும் திறன் தங்கள் சொந்த மொழியில் அமையும் போது பலமடங்காக வெளிப்படுகிறது. இம்முறை அவர்களின் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் உதவுகிறது. இந்தியாவிலும் இத்தகைய அமைப்பைக் கொண்டால், நம் திறமை பன்மடங்காகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

இத்தலைப்பில் மேலும் தகவல் அறிய
http://tamil.sify.com/vaarasurabi/june4/fullstory.php?id=13495323
திரு தரம்பால் அவர்களைப் பற்றியும் அவர்கள் படைப்பைப்பற்றியும் அறிய (ஆங்கில பக்கங்கள்)
http://www.samanvaya.com/dharampal
http://en.wikipedia.org/wiki/Dharampal

தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி !

No comments: