Monday, 29 October 2007

தமிழுக்கு வீரவணக்கம்

அண்ணா சாலை, சென்னை.
ஒரு நிமிடம் பொறு நண்பா.
சற்றே எத்திக்கும் திரும்பிப்பார்.
எங்கும் ஆங்கிலப் பலகைகள்.
மிக்க நன்றி.
தமிழ் அன்னையை வெற்றிகரமாக புதைத்துவிட்டாய்.

சென்னை - உலகின் தலைநகரமென
நாள்தோறும் மார்தட்டும் எனக்கு வெட்கம்.
அரைக்கால் சட்டை எங்கு வேண்டுமோ
அங்கு மட்டும் மறைக்காது போன்ற
அவமானம்.

பல்லயிரமாண்டு உன்னிடமிருந்து
தப்பிப்பிழைத்தது தமிழ்.
இன்று
உன்னிடம் அதற்கு மரண தண்டனை.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்
ஆங்கிலம் தெரியாதவர் பலப்பலர்.
நாளை
இந்தியாவில் ஆங்கிலம் தெரியாதவர்
சிறுபான்மையினர்! அவருக்கும் பெயருண்டு
கீழ்மக்களென்று.

எந்தப் பள்ளிக்கூடத்திலும்
இனிதமிழே சொல்லிக் கொடுக்காதீர்கள்.
அதுவே நம் தமிழன்னையை கொல்ல
எளிதான வழி.

விழுமின் எழுமின் என்றேன் சிலகாலம்முன்.
பலனில்லை.
எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ?
சுடுகாடு தான் கண்ணில் தெரிகிறது.
ஒவ்வொரு தமிழனும் முன்புதியில் உணர்ந்திடுக.

சுவையில்லா ஆங்கிலத்தின் வலிமையதன் மக்களே.
வலிமை பற்றி தமிழா, உனக்கு பாடம் வேண்டுமா ?
ஆங்கிலத்தில் பேசும் மழழையும் பெரியவரையும்
மதிக்கிறாய். வணங்குகிறாய். பூஜிக்கிறாய்.
இன்றோடு அதை நிறுத்திவிடு.
உன் எண்ணத்தை சீர்படுத்து.

தமிழின் உயிர் அதன் பயன்பாட்டில்.
எல்லா புதிய தொழில்நுட்ப சொல்லுக்கும்
தமிழ் சொல்லை நிறுவிவிடு.
தமிழையே எங்கும் எப்போதும் பயன்படுத்து.

தமிழ் பேசுவோரை வணங்கிவிடு.
வித்தை பலபுரிந்து தமிழுக்கு சமர்ப்பி.
செவ்வாயில் குடியேறு.
ஆங்கு
தமிழ் கற்றவர் மட்டுமே அனுமதி.

தமிழை செம்மைப்படுத்துவோரோடு சேர்.
தமிழ் கற்றுத்தரா பள்ளிகளை
இங்கிலாந்து போகச்சொல்.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - என்ற
வேந்தனாரின் மொழியை பொய்யாக்கிடு.

இவ்வுலகம் அழிந்தாலும் எவ்வுலகம் அழிந்தாலும்
தமிழே.. உனக்கு மரணமேயில்லை !

No comments: